தொப்புள்கொடி ரத்தம் காயும் முன்பே ஆண் குழந்தையை கட்டை பையில் வைத்து நிழற்குடையில் வைத்து சென்ற கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திலிருந்து மேற்பனைக்காடு செல்லும் சாலையில் ஆலடிக்கொல்லை பிரிவு சாலை அருகே உள்ள நிழற்குடையில் செவ்வாய்க்கிழமை (11.08.2020) அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் ஒரு கட்டை பை இருப்பதை பார்த்துள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டதால் அந்த பையை திறந்து பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்.. அந்த பைக்குள் தொப்புள்கொடி ரத்தம் காயாத நிலையில் ஆண் குழந்தை இருந்தது. அடியில் ஒரு ரேசன் சேலை துணி வைக்கப்பட்டிருந்தது. அந்த பையில் காரைக்குடி என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற கிராம உதவியாளர் கோகிலா குழந்தையை மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 2.100 கி.கி. இருந்த குழந்தைக்கு சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கீரமங்கலம் தெற்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் புஜ்பராஜ் ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நிழற்குடையில் கிடந்த குழந்தையை வாங்கி சென்று வளர்ப்பதற்காக சுமார் 20 பேருக்கு மேல் மருத்துவமனையில் குவிந்துவிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது.. “இந்த குழந்தை ஏதோ தவறான வழியில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்றும், எப்படியானாலும் 10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு எப்படி தூக்கி வீச மனம் வந்ததோ” என்கிறார்கள்.