Skip to main content

கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் 3 வது முறையாக தொடர் சாதனை!

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

k

 

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தவறான முடிவுகளுக்கு போகவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு அரசுப்பள்ளி தொடர்ந்து 3வது வருடமாக நீட் தேர்வில் அதிகமானவர்களை தேர்ச்சி பெற வைத்து சாதனை படைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 75 பேர் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை  எழுதி இருந்தனர். தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் மூலம் ஆசிரியர்களே தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சோபியா 398 மதிப்பெண்களும், சுபதாரணி 260 மதிப்பெண்களும், சுருதி 250 மதிப்பெண்களும், சுவேதா 235 மதிப்பெண்களும், ஜனனி 222 மதிப்பெண்களும் என 5 மாணவிகள் 220 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும் ஆர்த்தி 194, பவிதா 188, ராதா 187, சமீரா பானு 146, சுவேதா 125 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் சில மாணவிகள் 120 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

 

இந்த அரசுப் பள்ளி மாணவிகள் கடந்த 2 ஆண்டுகளில் 11 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். அதே போல இந்த வருடமும் 5 மாணவிகள் 220 மதிப்பெண்களுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் இந்த வருடமும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழக அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அதிகமான மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.  தொடர்ந்து சாதித்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தையும் மாணவிகளையும் பெற்றோர்களும் கிராமத்தினரும் பாராட்டி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்