Skip to main content

“எடப்பாடி பாலாகக் கொட்டுகிறார், ஸ்டாலின் விஷத்தைக் கக்குகிறார்!” -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கணிப்பு!

Published on 22/06/2020 | Edited on 23/06/2020
KD Rajendrapalaji prediction!

 

சிவகாசி அருகே,   விஸ்வநத்தம் ஊராட்சியில், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய உந்து நிலையம், தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை, தமிழக பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி,  பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.  அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் -

“இந்தியாவிற்காக, இந்திய அரசின் பாதுகாப்பிற்காக,  ஆதரவாகப் பேசக்கூடிய கூடியவர்களுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும். இந்தியாவிற்கு பிரச்சனை வரும் நேரத்தில்,  வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களை,  தேசத்துரோகிகளாகத்தான் இந்த நாடு பார்க்கும். இந்தியாவில் இருந்துகொண்டு, இங்கு விளையும் சோறை சாப்பிட்டுக்கொண்டு,  பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் ஆதரவாக யார் பேசினாலும்,  பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. எடப்பாடியார் ஆட்சியில் இருப்பதால்தான் தமிழகம் பாதுகாப்பு மாநிலமாக உள்ளது. எல்லோரும் சுதந்திரமாக இருக்க முடிகின்றது.

கரோனா வைரஸ் தாக்குதல் திமுக ஆட்சியில் இருக்குமேயானால்,  தற்போது உள்ளதைவிட  பல மடங்கு கூடியிருக்கும். எடப்பாடியார் ஆட்சியில் இருப்பதனால்,  வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்,  மருத்துவ குழுவினருடன், அமைச்சர்களுடன்,  தொழில் துறையினருடன்,  தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு,  கரோனா வைரஸ் நோயை எடப்பாடியார் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் மரணங்கள், பாதிப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு கிடையாது. வைரஸ் மரணங்களை, யார் நினைத்தாலும் மறைக்க முடியாது. நான் கரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டேன். யாருக்கும் தெரியாது என்று நினைத்தேன். ஆனால்,  மறுநாள் பத்திரிகைகளில், அது செய்தியாக வந்தது. கரோனா பாதிப்புகளை யாராலும் மறைக்க முடியாது. எடப்பாடியாரை பொறுத்தமட்டில்,  மறைக்கவோ ஒழிக்கவோ அவசியம் கிடையாது.

தினமும் ஒரு அறிக்கை விடச் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர். அவருடைய  ஆலோசனைப்படி, ஸ்டாலின் தினமும் ஏதாவது ஒரு அறிக்கையை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய்யாகத்தான் உள்ளது. அவரது பேச்சையும், செய்கையையும் திமுகவை சேர்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. கரோனா வைரஸிலிருந்து இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக,  எடப்பாடியார் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆளும் அரசோடு இணைந்து திமுக பணியாற்றினால்,  நாட்டு மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால்,  ஸ்டாலினுடைய நடவடிக்கைகளும் பேட்டிகளும், அறிக்கைகளும்,  எடப்பாடியார் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளது. ஆட்சிக்கு வர, பொய்யான அறிக்கைகளை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். எடப்பாடியார் பாலாகக்  கொட்டுகிறார்,  ஸ்டாலின் விஷத்தை கக்குகிறார். நமது தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் யார் நல்ல கருத்தை  கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உள்ளவர்.” என்றார்.

 

சார்ந்த செய்திகள்