மத்திய பிரதேசத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில பிஜேபி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேரை படுகொலை செய்துள்ளது. இதே போல பிஜேபி ஆளும் உ.பி. மாநிலத்தில் 2 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவருமாக மொத்தம் 9 பேர் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். சமூக நீதிக்காக போராடிய தலித் மக்கள் மீது மாநில பிஜேபி அரசுகளின் காவல்துறை நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலித் - பழங்குடி மக்களை பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்து இச்சட்டத்தை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் உறுதியுடன் வாதாட வேண்டும் என வலியுறுத்தி 02.04.2018ல் தேசம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி (DSMM) உள்ளிட்டு பல்வேறு தலித் அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஆனால் மத்திய பிரதேசத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில பிஜேபி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேரை படுகொலை செய்துள்ளது. இதே போல பிஜேபி ஆளும் உ.பி. மாநிலத்தில் 2 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவருமாக மொத்தம் 9 பேர் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.
சமூக நீதிக்காக போராடிய தலித் மக்கள் மீது மாநில பிஜேபி அரசுகளின் காவல்துறை நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்திற்கு பாதகமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்த வழக்கில் மத்திய மோடி அரசு சமூக கோட்பாடுகளுக்கு உட்டுபட்டு வலுவான வாதங்களை முன்வைக்கவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
தற்போது தேசம் தழுவிய அளவில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. தலித் - பழங்குடி மக்களை பாதுகாக்கும் வகையிலும், தற்போதுள்ள வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உறுதிபட அமல்படுத்தும் வகையிலும் மத்திய அரசு தரப்பில் திறமையான வழக்கறிஞர்களை நியமனம் செய்து வலுவான - சட்டப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தலித் மக்கள் மீது பல மாநிலங்களில் காவல்துறையினர் நடத்தியுள்ள அத்துமீறிய தாக்குதல்களுக்கு எதிராக வலுவான கண்டனங்களை வெளிப்படுத்துமாறும், எதிர்ப்பு இயக்கங்களை சக்தியாக நடத்துமாறும் அனைத்து ஜனநாயக சக்திகளையும், இயக்கங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.