Skip to main content

காயல்பட்டணம் இளைஞர் படுகொலை! துரித விசாரணை நடத்த டிஜிபி-யிடம் எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Published on 27/08/2017 | Edited on 27/08/2017
காயல்பட்டணம் இளைஞர் படுகொலை! 
துரித விசாரணை நடத்த டிஜிபி-யிடம் எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த மீரா தம்பி என்பவர், நேற்று (ஆக.27) காயல்பட்டணத்திலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அப்பேருந்தில் முன்பதிவு இல்லாத இரண்டு நபர்களை வரும் வழியில் பேருந்து ஓட்டுனர் ஏற்றியிருக்கிறார். போதையில் இருந்த அவர்கள் பேருந்துக்குள் ஏறியவுடன் கலாட்டாவில் ஈடுபட்டதோடு இருக்கையில் அமர்ந்திருந்த மீரா தம்பியின் மீது வாந்தி எடுத்துள்ளனர். இதனை மீரா தம்பி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மேலும் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதோடு மதரீதியாகவும் மீரா தம்பியை பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பேருந்து தூத்துக்குடி அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக இறங்கிய மீரா தம்பியை அந்த இரண்டு போதை நபர்களும் பின்தொடர்ந்து சென்று ஆயுதங்களால் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த கொலை குறித்து காவல்துறை விரைவாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தப்பியோடிய கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தமிழக காவல்துறை தலைவருக்கு அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், கொலையாளிகளின் பின்னணி குறித்தும், அவர்கள் ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த காரணம் குறித்தும் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த கொலையின் பின்புலத்தில் மதவெறி சக்திகளின் கைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

- எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்