Skip to main content

பாவலர் அறிவுமதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! -ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை வழங்குகிறது

Published on 14/08/2019 | Edited on 14/08/2019


 

ar



ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையில் ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ் விழா, வரும் 18-ந் தேதி, அங்குள்ள ஸ்ரீவித்யா மந்திர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஒருநாள் விழாவாக நடக்கிறது.
 

காலை 9 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வோடு தொடங்கும் இந்த விழாவில், கலைமாமணி வேல்முருகன் குழுவினரின் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் முனைவர் அருள் தக்லைமையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் பரிசுகளை வழங்கி,  பரிசுபெற்றவர்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து டாக்டர் எ.செல்லகுமார் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், ’விடியலின் விலாசம்’ என்ற தலைப்பில் தனியுரை நிகழ்த்துகிறார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், விருது வழங்கு நிகழ்ச்சி  நடக்கிறது. 


 

அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வே.சந்திரசேகரன் தலைமையில் , தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, திரைப்படப் பாடலாசிரியரும் பாவலருமான அறிவுமதிக்கு வழங்கப்படுகிறது. விருதை நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பாவலர் அறிவுமதிக்கு வழங்கி வாழ்த்துரை  ஆற்றுகிறார்.  

பின்னர் கல்வியாளர் சையத்து தலைமையில் இயக்குநரும் எழுத்தாளருமான பாரதிகிருஷ்ணகுமார், ’கண்ணீர் விட்டு வளர்த்தோம்’ என்ற தலைப்பில் தனியுரை நிகழ்த்துகிறார். 
 

நிறைவாக அறக்கட்டளைச் செயலாளர் சீனி. திருமால் முருகன் தலைமையில், ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் தலைமையில், ’அறியாமை இருளகற்றும் அதிகாலை வெளிச்சம்’ என்ற தலைப்பில் நகைச்சுவைப் பாட்டு மன்றம் நடக்கிறது. இதில் நெடுவாசல் ராணி குமார், மதுரை கிரி.சுரேந்திரன், சிவகாசி சசிகலா, திருமதி கெளதமி, புதுக்கோட்டை கலைராசன், கும்பகோணம் கிருபா ஆகியோர் பங்கேற்கிறார்கள். விழா ஏற்பாடுகள் சிறப்புற நடந்துவருகிறது.



 

சார்ந்த செய்திகள்