திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்தில் சிக்கியிருந்தது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பெட்டிகள் தடம் புரண்டது. சுமார் 19க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் லூப் லைனின் சந்திப்பில் உள்ள போல்ட் நட்டுகள் கழட்டப்பட்டு கிடந்தது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் லூப் லைனின் போல்ட் நட்டுகள் சதிச் செயல் காரணமாக கழட்டப்பட்டதா என்ற கேள்விகள் இருந்து. இந்நிலையில் திட்டமிடப்பட்டு லூப் லைனின் போல்ட் நட்டுகள் கழட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே நான்கு பிரிவுகளில் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிருக்கு அல்லது உடலுக்கு காயத்தை ஏற்படுத்துவது 125a, 125b, அதிவேகமாக இயக்குதல்-281, ரயில்வே பாதுகாப்பு சட்டம்-154 என்ற சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் போல்ட் நட்டுகள் திட்டமிட்டு கழட்டப்பட்டுள்ளதால் இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பாதுகாப்பு சட்டப் பிரிவு தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் யார் இதனை திட்டமிட்டு நிகழ்த்தியது என்ற புள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் தொடர்புடைய நபர்கள் யார் என்பதை அறிந்து கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் கவரப்பேட்டை அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்வதன் மூலம் சந்தேகப்படும் நபர்களை கண்டுபிடிக்கலாம் என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கவரப்பேட்டை ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள ஏதேனும் சந்தேகப்படும் நபர்கள் இருந்தார்களாஎன்பது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி கவரப்பேட்டை காவல் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.