![police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/jm6UO53ppCfoGzuxowVHyTfuYtkV0CGAaX7NOZ_0FBs/1593855956/sites/default/files/inline-images/606_25.jpg)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது ம.கொளக்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் ஆட்கொண்ட நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா (வயது 22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ஒரு வயதில் மீனலோசனி என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் தங்கள் குழந்தையுடன் கொளக்குடியிலுள்ள அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் பிரியங்காவும் அவரது குழந்தை மீனலோசினியும் வீட்டில் தூக்கில் தொங்குவதாகக் காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையையும், தாயையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இருவரின் உடலும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் பெண் மரணம் அடைந்தால் அது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு காவல்துறையால் பரிந்துரை செய்யப்படும். அதன்படி, சிதம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆறாம் தேதிதான் குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் தாயும் குழந்தையும் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அதன் காரணமாக குழந்தையைக் கொன்று விட்டுத் தாயும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பிரியாவின் கணவர் பாலமுருகன் மதுபோதையில் இருவரையும் கொலை செய்தாரா இப்படிப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
தாயும் குழந்தையும் ஒரே சமயத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.