ஆயுத பூஜையை முன்னிட்டு மாலை கட்டப்பயன்படும் மலர்கள் குவிப்பு
கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளில் ஆயுதை பூஜை விற்பனையாக மாலைகள் கட்ட பயன்படும் மலர்கள் குவிந்தது. பிச்சிப் பூ அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 150 வரை விற்பனை ஆனது.
மலர் உற்பத்தி :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், பாண்டிக்குடி, குளமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, மாங்காடு, வடகாடு மற்றும் கீரமங்கலத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் சுமார் 25 ஆண்டுகளாக மலர்கள் உற்பத்தியே அதிகமாக உள்ளது. அதே போல வம்பன், மறவன்பட்டி, செம்பட்டிவிடுதி, காயாம்பட்டி, மழையூர் மற்றும் திருவரங்குளம் பகுதி கிராமங்களிலும் மலர்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஏராளமான விவசாயிகள் மலர் உற்பத்தியையே பிரதான விவசாயமாக செய்து வருகின்றனர்.
விற்பனைக்கு குவிந்த மலர்கள் :
ஆயுத பூஜைக்கு வாகனங்கள் மற்றும் சுவாமி தரிசனங்களுக்காக அதிகமான மாலைகள் தேவைப்படுகிறது. அதனால் மாலை கட்டுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே மாலைகட்டும் மலர்களை வாங்கி மாலைகள் கட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த வகையில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருவரங்குளம் பகுதி விவசாயகளும் உற்பத்தி செய்யும் மலர்களை விற்பனை செய்யும் மலர் சந்தை கீரமங்கலத்திலேயே உள்ளது. அதனால் புதன் கிழமை மாலை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு மூடை மூடையாக சென்டி, பச்சை, கோழிகொண்டை, அரளி, வாடாமல்லி போன்ற மாலை கட்ட பயன்படும் மலர்கள் விற்பனைக்காக குவிந்தது. ஒரு நாளில் மட்டும் சுமார் 5 டன் அளவில் மலர்கள் விற்பனைக்காக குவிந்தது.
கிலோ ரூ. 100 :
இந்த மலர்களை வாங்கிச் செல்ல பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, நாகபட்டிணம் மற்றும் ஏராளமான ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களுடன் வந்து மலர்களை வாங்கிச் சென்றனர். மலர்களின் தரத்திற்கு ஏற்ப பிச்சிப் பூ ரூ. 150, சென்டிப் பூ ஒரு கிலோ ரூ. 70 முதல் 100 வரையும், வாடாமல்லி ரூ. 70, கோழிக்கொண்டை ரூ. 100, பச்சை ரூ. 25, முதல் 30 வரையும் விற்பனை ஆனது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மலர் விற்பனை இரவு நீண்ட நேரம் வரை பரபரப்பாக நடந்தது. இதே போல வியாழக்கிழமையும் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
-இரா. பகத்சிங்