கதிர் 2050 (திருவள்ளுவர் ஆண்டு) என்ற பெயரில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி, சமத்துவ பொங்கலையும் தமிழர் திருநாளையும் ஏக கோலாகலமாகக் கொண்டாடினர். வெளிநாட்டு மற்றும் வெளிமாநில மாணவ மாணவியரும் தமிழர்களின் கலாச்சார உடையான பாவாடை தாவணி, வேட்டி, சேலை அணிந்து ஆர்வத்தோடு சூழ்ந்திருக்க, பல்கலைக்கழகத்தின் அனைத்துத்துறை மாணவர்களும் இணைந்து பொங்கல் கொண்டாடினர்.
இது குறித்து உற்சாகமாகப்பேசிய அவர்கள்...
“பொங்கல் பானையில், சமத்துவத்தின் அடையாளமான வெள்ளத்தையும், சகோதரத்துவத்தின் அடையாளமாக பச்சரிசியையும் பேரன்பு நறுமணத்தின் அடையாளமாக ஏலக்காயையும் சேர்ந்து, எங்கள் உணர்வுகளால் தீமூட்டிப் பொங்கல் வைத்தோம், இங்கு பொங்கல் அடுப்பில் எரிக்கப்பட்டது விறகல்ல, சாதிமத ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத் தாழ்வுகளும்தான் எரிக்கப்பட்டன. நாங்கள் பறையை தீயில் காட்டி வாட்டியபோது.. அதன் மீதிருந்த சாதீய அடையாளமும் பொசுங்கியது.
நாங்கள் நடத்திய எல்லா கலைநிகழ்ச்சியிலும் எங்களுக்கான சமத்துவ அரசியல் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. காரணம் 2050 ஆம் (திருவள்ளுவர் ஆண்டு) ஆண்டில் மக்களின் அத்தியாவசிய தேவை, அரசியலைப் புரிந்துகொள்ளுதல்தான் என்பதை நாங்கள் புரிந்தே வைத்திருக்கிறோம். நம்மை எல்லா விதத்திலும் அரசியல் ஆட்கொண்டிருக்கிறது. கலையைக் கூட அரசியலாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எல்லாம் தொலைந்து, கலை வடிவங்களுக்குள்ளும் ஆபத்தான அரசியல் ஊடுருவி நம்மைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வும் ஒரே வழியும் விடுதலையும் தெளிந்த அரசியல்தான், அரசியல் புரிதல்தான். இனி எல்லா இடங்களிலும் ஆயிரமாயிரம் கதிர்கள் முளைக்கும். எல்லாக் கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் நமக்குத்தேவையான அரசியல் வெளிப்படும். நமக்கான அரசியலை இனி நாம் கொண்டாடுவோம். தொடரும் இந்த கலை அரசியல், எங்கும் பரவும்”என்றார்கள் புதிய குரலில். இதில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளும் பறை ஆட்டமும் அரங்கேறி, மாணவர்களின் பொங்கலை உணர்வுப் பொங்கலாக்கியது.
-சூர்யா