பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப் போன்று 2020ல் தமிழகத்தை உலுக்கியது நாகர்கோவில் காசியின் பாலியல் வழக்கு. கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம் பெண்கள், வசதியான குடும்பப் பெண்கள் என 90க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி அதை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான் காசி.
இந்த நிலையில் தான் அந்த கள்ளப் பூனை காசிக்கு சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் மணி கட்டி சிறைக்குத் தள்ளினார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தர முன்வராத நிலையில், அந்த பெண் மருத்துவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி நாகர்கோவில் எஸ்.பி ஸ்ரீநாத்துக்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கில் அவனால் சீரழிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன. 120 பெண்கள், 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து தீவிரமடைந்த அந்த வழக்கு, பின்னர் மேலும் பல பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர். மாதர் சங்கத்தினரின் போராட்டங்களால் காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். விசாரணையின் பொழுது தெனாவெட்டாக காசி ஹார்ட்டின் காட்டியது அந்த நேரத்தில் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் நாகர்கோவில் மகளிர் அதிவிரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என எதிர்பார்த்திருந்த காசி, ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் நீதிமன்றத்திற்கு போலீசார் பாதுகாப்போடு வந்திருந்தான். ஆனால் நாகர்கோவில் நீதிமன்றம் இயற்கை மரணம் அடையும்வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்து அதிரடியாக உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “இந்த வழக்கு தொடர்பாக மொத்தமாக 29 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டதாகவும், 34 ஆவணங்கள், 20 சான்று பொருட்கள் குறியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகவும், அவரது தந்தை தங்கபாண்டியன் இதை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” எனவும் தெரிவித்தார்.