கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கே.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் ஜெயந்தி ராணி, வீட்டுமனை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாந்தோணிமலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஜெயந்தி ராணியை (48 வயது) கைது செய்தனர்.
சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை கரூர் விஜிலென்ஸ் போலீசார் ஆவணங்களைத் தயார் செய்து நள்ளிரவு 12.30 மணிக்கு கரூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஆனால் நீதிபதி நாளை ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை சாப்பிடுவதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக சொல்லியிருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், எந்த சிகிச்சையும் பலனளிக்காததால், ஜெயந்தி ராணியின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்திற்குள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.