மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாகப் பதிவான வழக்கில் அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை மனுவாகப் பெற்று, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க.வினர் அளித்து வந்தனர். அதன்படி செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தபோது மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில், தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதில் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த ஒரு மிரட்டலும் விடுக்கப்படவில்லை என்றும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதன் அடிப்படையில், நான்கு நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்டு புனையப்பட்ட வழக்கு என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வந்ததாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி நிர்மல்குமார் இன்று (28/05/2020) பிறப்பித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நடந்துகொண்டது போல், இனி நடந்துகொள்ள மாட்டேன் என கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்கு கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.