கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் முருங்கைக்காய் பிரதான விவசாயமாக உள்ளது. அப்பகுதி விவசாயிகள் முருங்கைக்காயை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய அரசுக்கு நெடுங்காலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோவில்பட்டியில், முருங்கை விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முருங்கை மற்றும் செங்காந்தள் மலர் விவசாயிகளை ஒன்றிணைத்து புதிதாகச் சங்கம் உருவாக்கப்படும். அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்யப்படும். இப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் முருங்கைக்காய் பவுடர் செய்து மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்யும் நிறுவனம் 3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்" என்று தெரிவித்தார்.