Skip to main content

கர்நாடக மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வரவேற்கத்தக்கது - கி.வீரமணி

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
கர்நாடக மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வரவேற்கத்தக்கது - கி.வீரமணி

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்றை கருநாடக மாநில அரசு கொண்டு வருவதுபோல தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்பட வேண்டும் என  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது,

கருநாடகத்தில் முதலமைச்சர் சித்தராமய்யா அவர்களது தலைமையில் உள்ள காங்கிரஸ் ஆட்சியின் அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கியுள்ள செய்தி பெரிதும் மகிழ்ந்து, பாராட்டி வரவேற்கவேண்டிய அருமையான செய்தியாகும்!

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?

பதவியேற்கும் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவர்கள்வரை இந்திய அரசியல் சட்டத்தினைக் காப்போம், பரப்புவோம் என்று உறுதிமொழிப் பிரமாணம் ஏற்கின்றனர். அந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ-எச் பிரிவு குடிமக்களின் அடிப்படைக் கடமைகள்  என்ற தலைப்பில், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், மகளும் அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் உரிமையும், மனிதநேயத்தையும், சீர்திருத்த உணர்வையும் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் அச்சட்டப் பிரிவின் சாரம்.

ஆனால், பதவி ஏற்றவர்கள் எவருமே இதனைத் தெரிந்துகொள்ளவுமில்லை; புரிந்துகொள்ளவுமில்லை!

பிரதமர் உள்பட சாமியார்களின் கால்களில்... பிரதமராக இருப்பவர்கூட சாமியார்கள் காலடியில் அமர்வது, அவர்களது கிருபாகடாட்சம் தங்களின் வாக்கு வங்கிக்கு வளமை சேர்க்கும் என்று கருதுவது என்ற முறையில் நடந்துகொண்டால், சாதாரண பாமரக் குடிமகனின் நிலை மேலும் பரிதாபமாகத்தானே முடியும்? (ராம் ரகீம் சாமியாருடன் தேர்தல் பிரச்சாரம்).

மனிதத்தன்மையற்ற செயல்கள்

கடந்த 2013 ஆம் ஆண்டு கருநாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சித்தராமய்யா, மகாராஷ்டிரத்தைப்போல கருநாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படும்; இதன்மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் மனிதத் தன்மையற்ற சடங்குகள், ஜோதிடம், மாந்திரீகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும்; குறிப்பாக மங்களூரு அருகே உள்ள குக்கு  சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது தலித்துகள் உருளும் சடங்கு (மடேஸ்நானா) நிர்வாண பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்கு தடை விதிக்கப்படும் என்றார்.

எதிர்ப்பவர்கள் யார்?

இதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், சிறீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் எடியூரப்பா மத நம்பிக்கைகளில் எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இந்த சட்டத்தைக் கொண்டு வந்தால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்!

(இவர் முதலமைச்சராக இருந்தபோது, ஜோதிடர் கூறியபடி நிர்வாணமாகப் படுத்துக் கிடந்தாரே!)

இதுபோலவே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியும், மடாதிபதிகளின் கூட்டமைப்பும் மறைமுகமாக இந்த மசோதாவை எதிர்க்கின்றன!

(தேவகவுடா பிரதமராக இருந்தபோது நாமக்கல் ஜோதிடர் பேச்சைக் கேட்டு ஒவ்வொன்றிலும் நடந்துகொண்டவர் - பலன் பூஜ்ஜியம்தானே!)


வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார் கருநாடக முதலமைச்சர்!

இது தொடர்பாக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறும்போது, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கருநாடகாவில் விரைவில் அமுலாவது மகிழ்ச்சியாக உள்ளது; இன்னும் இந்த மசோதா முழு வடிவம் பெறாததால், அதிலுள்ள அம்சங்கள் தொடர்பாக இப்போது பேச முடியாது. ஜோதிடம், வாஸ்துவுக்குத் தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சட்டத்திற்கு வரவேற்பு - திராவிடர் கழகம் துணை நிற்கும்

கருநாடக அரசின் இந்த முடிவுக்கு முற்போக்கு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.


கருநாடக மாநில திராவிடர் கழகம் இதனை முழு மனதாக வரவேற்பதோடு, இதனால் இவ்வரசுக்கு ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், மக்களிடையே பிரச்சாரம் செய்வது உள்பட பல ஆக்க ரீதியான முயற்சிகளில் ஈடுபடும். தமிழ்நாடு திராவிடர் கழகம் வழிகாட்டும்.

அரசியல் சட்டத்தில் மதச் சுதந்திர உரிமை பிரிவு 25, 26 களில் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு நிறைய இடம் உள்ளது!

பல தீர்ப்புகளும் இருக்கின்றன!

அரசியல் சட்டம் 25, 26 பிரிவுகள் Subject to Public Order, Morality, Health  நிபந்தனையின் பேரில்தான் மதச் சுதந்திரம் பாதுகாப்பு அடிப்படை, உரிமைப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

சமூக சீர்திருத்தம் செய்ய நிரம்ப வாய்ப்பு இடமும், அச்சட்டப் பிரிவுகளில் உள்ளது. எனவே, பூச்சாண்டி காட்டும் காவிகள், மதவெறியர்களைப் புறந்தள்ளி, துணிந்து இந்தப் புரட்சிகர சட்டத்தை நிறைவேற்றி, இந்தியாவுக்கு மகாராஷ்டிரத்தைப்போல புது ஒளி பாய்ச்சிடவேண்டும்.

தமிழ்நாட்டிலும் சட்டம் வரட்டும்!


தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றிட நீண்டதொரு பிரச்சாரம், போராட்டம் இவைகளை, ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டி, திராவிடர் கழகம் ஆக்கப் பணியை களப்பணியாக உடனடியாக மேற்கொள்வதுபற்றி யோசிக்கும். விரைவில் செயல் திட்டத்தை அறிவிக்கும். 

சார்ந்த செய்திகள்