கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரிநாராயணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். இதைத் தொடா்ந்து சென்னை தி.நகர் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹரி கிரன் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து மாவட்டத்தின் 52 ஆவது காவல் கண்காணிப்பாளராக ஹாிகிரன் பிரசாத் இன்று (26/03/2022) காலை நாகா்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஹரிகிரன் பிரசாத் தனது பெற்றோர்களான தந்தை நரசிம்மலு, தாயார் கஸ்தூரிக்கு சல்யூட் அடித்து விட்டு, தனது முதல் பணியாக கன்னியாகுமரிக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வரவேற்க சென்றார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத், "ஆந்திரா மாநிலம் சித்தூர் தனது சொந்த ஊராகும். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடியில் படித்தேன். 2016- ல் ஐபிஎஸ் முடித்த நான் திருச்சியில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளராகவும், தொடா்ந்து வள்ளியூா் சப்-டிவிசன் உதவி காவல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளேன்.
தற்போது கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள நான் மக்களுக்கு காவல்துறை மீதுள்ள அச்சத்தைப் போக்கி நல்ல ஒரு உறவை ஏற்படுத்துவேன். அதேபோல் காவல் நிலையங்களில் வரும் புகார்கள் மீது தாமதமின்றித் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். மேலும் பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வழி வகை செய்வேன்" என்றார்.