
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர்.
அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கனிமொழி எம்.பி சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி புகார் தெரிவித்துள்ளார்.