நெல்லையில் இன்று தி.மு.க. கிழக்கு, மேற்கு மாநகர் மாவட்ட மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் மறுத்துள்ளனர்.
கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த பிரச்சினையில் காலதாமதம் செய்கிறது. தற்போது மேலும் காலதாமதம் செய்வதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே தான் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது கறுப்புக்கொடி காட்டப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் அ.தி.மு.க. போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் ஸ்தம்பிக்க செய்தும் பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க.வினர் ஆளுக்கொரு கருத்தை சொல்லி இந்த பிரச்சினையை திசை திருப்புகிறார்கள்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது முதல் அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த தொழிற்சாலை மூலம் நீராதாரம் கெட்டு விட்டது. சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டெர்லைட்டை விரிவாக்கம் செய்ய அரசு அனுமதி அளித்தது ஆச்சரியம் அளிக்கிறது. தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து அகற்ற வேண்டும். அதை நிரந்தரமாக மூடவேண்டும்.
இந்த அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்க்காத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்தி தான் தீர்வு காண வேண்டி உள்ளது. ஜல்லிக்கட்டு ஆனாலும் சரி, ஸ்டெர்லைட் ஆனாலும் சரி போராட்டம் நடத்தி தான் தீர்வு காண வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.