காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் துப்பாக்கிக் கொள்ளையன் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நேற்று (10/10/2021) காலை சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் ஆறு சவரன் நகைகளை வழிப்பறி செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தப்பித்துச் செல்ல முயற்சித்தனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் கை துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின்னர், கொள்ளையர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தென்னலூர் ஏரியில் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் கூறியதையடுத்து, அந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், ஐந்து ட்ரோன் கேமராக்களைக் கொண்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். அதில் கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் இடம் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மோகன் தாஸை கொள்ளையர்கள் தாக்க முயன்றனர். மேலும், துப்பாக்கியால் சுட முயன்றதையடுத்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தார். அவரிடமிருந்து மூன்று கத்திகள், ஒரு கைத்துப்பாக்கி, வயதான பெண்மணியிடம் பறிக்கப்பட்ட தங்க நகை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த கொள்ளையனின் பெயர் முர்தஷா என்பதும், அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தப்பியோடிய மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.