காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சராசரி பாதிப்பு விகிதம் 7,500-ல் இருந்து 5,500 ஆக குறைந்துள்ளது. காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோய்ப் பரவல் தடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய்த் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதே, அரசின் நடவடிக்கைக்கு சான்றாகும். சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நோய்ப் பரவலைத் தடுக்க தவறிவிட்டதாகச் சொல்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுபவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை படிப்படியாக குறைத்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 88% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்ததால் இறப்பு எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துள்ளோம்." இவ்வாறு முதல்வர் பேசினார்.