கவிஞர் கனகாபாலனின் ’அக யாழின் குரல்’ ,’என் கனா யாழ் நீ ’ ஆகிய கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா மாதவரம் விஜய் பார்க் ஓட்டலில் சிறப்புற நடந்தது. கவிஞர் முத்துவிஜயன் கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க... விழா தொடங்கியது. கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமை ஏற்க, கவிஞர்கள் மரியதெரசா, நிமோஷினி ஆகியோர் நூல்களை வெளியிட்டனர்.
இதை ஆனந்தராஜ், ஜெயலட்சுமி, சுந்தரமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கவிக்கோ துரைவசந்தராசன் நூலாசிரியர் குறித்து கவித்துவ மின்னல் தெறிக்க அழகான அறிமுகவுரையை வழங்கினார்.
வாழ்த்துரை வழங்கிய வானரசன் உரையில் நகைச்சுவை மிளிர்ந்தது. ’பாவையர் மலர்’ ஆசிரியர் வான்மதி, தன் வசியப் பேச்சால் ஈர்த்து அவையைக் கலகலப்பாக்கினார்., கவிஞர் துருவன், சுவையான கவிதைகளை எடுத்துக் காட்டி உரைநிகழ்த்தினார். கவிஞர் நர்மதா, சுவையான தன் பேச்சில் பெண்ணியம் குறித்தும் குரல் கொடுத்தார். சிந்தைவாசன் ,நேரம் கருதி நூல்களின் ஆய்வுரையை சுருக்கமாகவும் சுவைபடவும் வழங்கினார். மேடை ஏற இயலாத சுந்தரமூர்த்தியும் தன் அன்பான உரை மூலம் நூலாசிரியரை வாழ்த்தினார்.
நூலைவெளியிட்ட மரியதெரசா, படபடவென வாழ்த்துமழை பொழிய, நிமோஷினி விஜயகுமார் அருவியாய் ஆர்பரித்து அவையோரை ஈர்த்தார். பேசத்தெரியாது என்றபடி மேடையேறிய ரவி தங்கராஜும் சுவையாகவே பேசினார். தலைமையேற்ற தமிழ்நாடன், கவிதைகள், மொழியின் வேர்கள். எனவே இதற்குக் காரணமான கவிஞர்கள் கொண்டாடப்படவேண்டும். கவிஞர்களைக் கொண்டாடாத நாடு ஆரோக்கியமான நாடாக இருக்காது என்றார். அரங்கு முழுக்கக் கவிஞர்களாகக் காட்சியளித்தது, இவ்விழாவின் சிறப்பாகும்.