’’கமல்ஹாசன் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனாலும் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது. தானும் இருக்கிறேன் என்பதற்காக ஏதே பேசிக்கொண்டிருக்கிறார் அவர்’’என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அவர், மேலும் திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் என்று தெரிவித்தார். காங்கிரசுடன் கூட்டணி குறித்து பார்க்கலாம் என்று கமல்ஹாசன் கூறியதும், அதை வரவேற்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறியது பற்றிய கேள்விக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
துரைமுருகன் மேலும் தனது பேட்டியில், ’ துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான லஞ்சப்பணம் கை மாறியது என்று ஆளுநர் இப்போது சொல்கிறார்.
அண்ணா பல்கலைக்கு வேறு மாநிலத்தவரை நியமனம் செய்தார். இதை திமுக எதிர்த்தது. அதன் பின்னர் அம்பேத்கார் பல்கலைக்கு இப்பத்தான் வெளியில் இருந்து ஒருவரை நியமனம் செய்தார். அதை எதிர்த்தபோதும் சொல்லவில்லை. அந்த சமயத்தில் என்னையும் தளபதியையும் அழைத்து உட்கார வைத்து, காபி கொடுத்து, ஆளுநர் பேசும்போது துணைவேந்தர்களின் தகுதியைத்தான் கூறினார். தகுதியான நபர்கள்தான் என்று ஆதாரங்களை காட்டி துணைவேந்தர்கள் நியமத்தை நியாயப்படுத்தினார். ஆனால், அப்போது அவர் துணைவேந்தர்கள் நியமனத்தில் லஞ்சம் கை மாறியதாக கூறவில்லை. இப்போதாவது கூறுகிறாரே உறுதியாக இருக்கிறாரே என்று நினைத்தால், அவர் பல்டி அடித்துவிட்டார். நான் அப்படிச்சொல்லவில்லை, அப்போது சொல்லவில்லை என்று மாற்றி மாற்றி பேசுகிறார். ஆளுநர் நிலையாக இல்லை.
முதலமைச்சர் மீது ஒரு வழக்கு, டிஜிபி மேல் ஒரு வழக்கு, முன்னாள் தலைமைச்செயலாளர் மீது ஒரு வழக்கு, ஆளுநர் மீது அப்படி இப்படின்னு.... ஆகையினால் உன்னால நான் கெட்டேன் என்னால் நீ கெட்டே என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சர்க்கார்’’என்று கூறினார்.