நேற்று அரசுமுறை பயணமாக தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அதிமுக தலைமை, பாஜகவுடன் வைத்திருக்கும் கூட்டணியை அரசு விழா மேடையிலேயே உறுதிப்படுத்தி இருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அதிமுக பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகியிருப்பது தொடர்பான கேள்விக்கு, தெரிந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்றார்.
மனுநீதி வழக்கத்தில் இல்லாதது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் நீங்கள் எடுத்துள்ள மருதநாயகம் படத்தில் ஒரு பாடலில் 'மனு சொன்ன நீதி' என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதே என்ற கேள்விக்கு, அந்த படம் பதினேழாம் நூற்றாண்டு கதை, அதற்கு எழுதிய பாடல் அது. நீங்கள் சொல்வது போல் அந்த புத்தகம் புழக்கத்தில் இல்லை என்பது ஒருபுறம் உண்மை. அதேபோல் அந்த புத்தகம் தேவை இல்லை என்பதும் மிகப்பெரிய உண்மை. அதற்கான ஏற்பாடுகளை தான் நாம் சமூகமாக கூடி செய்து கொண்டிருக்கிறோம்.
மேலும் இப்பொழுது கூட்டணிக்கான பதில் சொல்ல வேண்டிய நேரம் இல்லை. பல கூட்டணிகள் உருவாகலாம். பல கூட்டணிகள் உடையலாம். அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கும் என்றார்.