தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களோடு போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அவர் அறிவித்தார்.
இதற்காக கமல்ஹாசன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் என்றார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் அ.குமரெட்டியாபுரம் செல்கிறார். அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களோடு அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்கிறார். கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ச.ம.க. தலைவர் சரத்குமார் பங்கேற்றார். வருகிற 8-ந் தேதி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார்.