நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலமான அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். அவரை அமைச்சர் உதயநிதி வரவேற்றார். நேற்று மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான கையொப்பம் கையெழுத்தானது.
இன்று மாலை காங்கிரஸ் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி மறைமுகமாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். இதனால் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், 'இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. இது பதவிக்கான தேர்தல் கிடையாது. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல; நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
இதுவரை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்- 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் -2 தொகுதி, ஐ.யூ.எம்.எல்- 1 தொகுதி, கொ.ம.தே.க-1 தொகுதி, மதிமுக-1 தொகுதி, விசிக-2 தொகுதி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ்-திமுக இடையே தற்போது வரை இறுதி பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.