தமிழகத்தைச் சேர்ந்த 2700 முதல் 3000 வரையிலான கூலித் தொழிலாளர்கள், செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு ஆந்திர மாநில சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்த மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரக் காவல்துறையினரால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் மீதான குற்றச்சாற்றுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செம்மரக் கடத்தலில் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியிருக்கலாம்; கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான குற்றச்சாற்றுகளை நிரூபிக்க முடியாது என்பதால் அவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளை பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாமல் தடுத்து வருகின்றனர். இதனால் பல தமிழர்கள் எந்த வித விசாரணையும் இல்லாமல் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிணை வழங்கி நீதிமன்றங்கள் ஆணையிட்ட பிறகும், அவர்களை வேறு வழக்கில் கைது செய்து தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆந்திர வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்; குற்றவழக்கில் ஆந்திர நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் தமிழகத் தொழிலாளர்கள் கை விலங்கிட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் விடியோ பதிவும், தமிழகத் தொழிலாளர்கள் சிலரை ஆந்திர வனத்துறையினர் மிகவும் கொடூரமாகத் தாக்கும் விடியோ பதிவும் வைரலாக வலம் வந்தன.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக தமிழக அரசால் சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2016&ஆம் ஆண்டு 287 தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை சாதனையாக கொண்டாடிய தமிழக ஆட்சியாளர்கள் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டதை தடுப்பதற்கு தவறி விட்டார்கள்.
ஆந்திர சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் சிலர் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவர் மீதும் சராசரியாக 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு வழக்கில் பிணை வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆவதால் அனைத்து வழக்குகளிலும் பிணை வாங்கி விடுதலையாவது சாத்தியமல்ல என்ற விரக்தி நிலைக்கு சென்று விட்ட தொழிலாளர்கள் விடுதலை என்பதை மறந்து விட்டு, கொடுமைகளுக்கு பழகி விட்டனர். அவர்களை மீட்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தியோ, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோ அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இச்சிக்கலை மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.