திருச்சியில் கமல் கட்சியின் சார்பில் தயார் ஆகும் மாநாட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் செல்போனில் பேசிய கமல், மதுரையில் நாம் கட்சி தொடங்கியதற்குப் பிறகு நடந்த ஒரு பிரஸ் மீட்டில் மதுரையில் கூட்டம் பெரிதாக இல்லை என சொல்கிறார்களே என்று கேட்டார்கள். அப்போது நான் இது எண்ணிக்கையைக் காட்டும் கூட்டமல்ல, எண்ணங்களைக்காட்டும் கூட்டம் எண்ணிக்கையைக் காட்டும் கூட்டம் என்றால் திருச்சி வந்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.
அதனால் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். நான் சொன்னதை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கொடுத்த கமலின் இந்த சவால் பேச்சை அடுத்து பயங்கர சுறுசுறுப்பாக வட்டமடித்து ஆட்கள் திரட்டும் பணியில் இருக்கிறார்கள்.
மதுரையில் பொதுக்கூட்டம், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை என ஒரு ரவுண்டை முடித்துக்கொண்டு, அடுத்ததாக இன்று (04.04.18) திருச்சியில் ஜி கார்னரில் பொதுக் கூட்டத்தில் பேச இதற்காக ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி பொதுக் கூட்டத்துக்கு எம்ஜிஆர் பாணியில் ரயில் பயணத்தைத் தேர்வு செய்தார் கமல்ஹாசன். கடந்த ஒரு வார காலமாகப் காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம், போராட்டம் உண்ணாவிரதம் என்று போராட்ட களமாக மாற்றிக்கொண்டிருப்பதால் கமல்ஹாசன் ரயில் பயணம் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
மாலை 6.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ரெயில் வந்து நின்றதும் கமல்ஹாசன் இருந்த குளிர்சாதன பெட்டியை நோக்கி ஓடி அதனை சூழ்ந்து கொண்டனர். தொண்டர்களை பார்த்ததும் கமல்ஹாசன் கையசைத்தபடியே கீழே இறங்கினார்.
கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர் சிவகுமார், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், துணை பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். கமல்ஹாசனுடன் உயர்நிலை குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா உள்பட 20 நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் சங்கிலி போல் நின்று கமல்ஹாசன் மற்றும் அவருடன் வந்தவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். கமல்ஹாசனை பார்ப்பதற்காக பலர் முண்டியடித்துக்கொண்டு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலைய வாசலில் வைக்கப்பட்டு இருந்த ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி தள்ளிவிடப்பட்டது. கமல்ஹாசன் வெளியே வந்ததும் தயாராக நின்று கொண்டிருந்த வேனின் மேல் பகுதியில் ஏறி நின்றார். பின்னர் நான்குபுறமும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். சில தொண்டர்கள் கொடுத்த பூங்கொத்தையும் வாங்கி கொண்டார்.
அதன் பின்னர் தான் தங்குவதற்கான எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். கமல்ஹாசன் வருகையையொட்டி ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்த கமலஹாசன் காருக்கு போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்து அனுப்பி வைத்தனர்.
நடிகர் கமல்ஹாசன் இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். மாலை 6 மணி அளவில் ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
ஜி.கார்னர் மைதானம் ஜெயலலிதா, மோடி, ஆகியோருக்கு திருப்பு முனையாக அமைந்த அதே இடத்தில் வடக்கு பார்த்து கருப்பு கலரில் திறந்த வெளியில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலிருந்து தொண்டர்கள் 2 இலட்சம் பேருக்கு மேல் வருவார்கள் என்று கமல் கட்சியினர் சொல்லிக்கொண்டே இருந்தாலும்.- இந்த மைதானத்தில் கமல் கட்சியினர் போட்டிருக்கும் நாற்காலிகள் அடிப்படையில் 10,000 பேருக்கு மேல் அமரமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஜெ.நடத்திய ஜி.கார்னர் கூட்டமே திருப்புமுனை கூட்டம் என்று அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டது. அந்த உட்கார வைக்காமல் நெருக்கமாக நின்று கொண்டே கூட்டத்தை நடத்தினார் அப்போதே 40,000 பேர் தான் இந்த மைதானத்தில் நின்றனர். ஜி.கார்னார் மைதானத்தை முழுமையாக பயன்படுத்தினாலும் முழுவதும் பிரமாண்டமாக சேர் போட்டாலே 28000 பேருக்கு மேல் அமர வைக்க முடியாது.
ஆனால் தற்போது கமல் இந்த மைதானத்தை 3 அடுக்காக பிரித்திருக்கிறார். மைதானத்தில் பார்வையாளர் உட்காருவதற்கு என்று தகர தடுப்புகள் அமைத்து மைதானத்தின் அளவையே மிக சிறிய அளவில் குறைத்து அமைத்திருக்கிறார் நாற்காலிகளுகம்10,000க்கும் குறைவான நாற்காலிகளே போடப்பட்டுள்ளது.
விஜய் டிவியின் கலைநிகழ்ச்சிகளுக்கு சினிமா செட்டு போடும் குழுவினர் வைத்தே இரண்டே நாட்களில் திறந்தவெளி மேடை அமைத்துள்ளார். மேடை முதல் வி.ஐ.பி. பார்வையாளர்கள் உட்காரும் நாற்காலி வரை கருப்பு கலரிலே அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் டாய்லட் வசதிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
உளவுத்துறை போலிஸிடம் கமல் கட்சியினர் முதலில் 10,000 வருவார்கள் எனவும் பிறகு 15,000, எனவும், இப்போ 25,000 பேர் வருவார்கள் எனவும் கணக்கு சொல்லி இருக்கிறார்கள். இன்று மாலையில் திருச்சியில் கூட்ட போகும் கூட்டம் தான் டூவிட்டர் அரசியல் மக்களிடம் எடுபடுகிறதா என்பதை உணர்த்தும் பொதுகூட்டமா இருக்கும்.