கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கடலூர் மாவட்டம் குணமங்கலம் மற்றும் அழகியநத்தம் கிராமங்களில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கிராம மக்கள் மத்தியில் பேசியதாவது:
" எல்லோரும் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் சிலவற்றில் தவறிவிட்டோம் நானும் அதில் அடங்கும். இப்போது செய்யலாம் எனும் எண்ணத்திலேயே தற்போது நான் உங்களை நாடி வந்துள்ளேன். 25 வருட காலமாக இப்படி கிராம சபை கூட்டங்களில் நாம் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகளைச் செய்யாமல் விட்டு விட்டோம். கிராமசபை என்ற ஆயுதத்தை பயன்படுத்தாமல் பூஜை செய்து வந்துள்ளோம். இது நல்லதல்ல. கிராம பஞ்சாயத்தில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய கடமையாகும்.
வாக்களிப்பதற்காக அவர்கள் கொடுக்கிற ஆயிரம், இரண்டாயிரம் வாங்கினால் ஐந்தாண்டுகள் நாம் எதிர்காலத்தை அடகு வைப்பது போன்றதாகும். அது நமக்கு பல இன்னல்களையும், துன்பத்தையுமே அளிக்கும். கிராம சபைகளில் நிறைவேற்ற படுகிற தீர்மானங்கள் செயல்வடிவம் பெற வேண்டுமெனில் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட வேண்டும், அதற்கு பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் அடித்தளம் வேரூன்றி அமையும். கிராமங்கள் வளம் பெற்றால் தான் நாடும் வளம் பெறும்.
பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் ஒன்றும் செய்ய முடியாது. கிராம பஞ்சாயத்து தேர்தலை தள்ளிப்போடாதீர்கள். பஞ்சாயத்து தேர்தல் வந்தால் தான் அனைத்து திட்டங்களும் சென்றடையும். எனவே பஞ்சாயத்து தேர்தல் நடத்த கிராமத்தில் உள்ள தாய்மார்கள் வீட்டில் இருந்து குரல் கொடுக்க வேண்டும், இந்த குரல் பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் எதிரொலிக்கும் எனவே பஞ்சாயத்து தேர்தலை விரைந்து நடத்திட வழி காண வேண்டும்.
கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்க வில்லை என்கிறார்கள், மத்திய அரசு கொடுக்க வேண்டும் கொடுத்து தான் ஆக வேண்டும் அதே சமயம் கஜோலுக்கு நிவாரணம் கொடுக்க மாநில அரசிடம் பணம் இல்லை என்றவர்கள் பொங்கல் பரிசாக 2 ஆயிரம் கோடி எப்படி கொடுக்க முடிந்தது " என்றார்.