கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த நிலையில் கல்வராயன் மலையில் போலீசார் முகாமிட்டு தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் தலை தூக்கிய சம்பவம் பொதுமக்களை இடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வராயன் மலையில் உள்ள மணியார்பாளையம் அடுத்த அருவங்காடு வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தனிப்படை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி காவல் துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு அருவங்காடு வனப்பகுதியில் சுடச் சுட காய்ச்சப்பட்டு சில மணி நேரங்களில் ஆன 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 4 பேரல்களில் இருந்த 800 லிட்டர் கள்ளச்சாராய உரலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திலே அதனைக் கொட்டி அழித்தனர்.
விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்ட சாராயத்தையும் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக அருவங்காடு பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 68 பேர் உயிரிழந்த பிறகும் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் மறுபடியும் தலை தூக்கி உள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.