கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ளது முடியனூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளிகள், உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு வெட்டுவதற்காக மினி லாரியில் இன்று காலை வந்தனர்.
பிறகு கரும்பு வெட்டும் பணி முடிந்ததும் அதே மினி லாரியில் தங்கள் இல்லங்களுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த மினி லாரியை ராம்கி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த மினி லாரி எலவாசனுர் கோட்டை அருகே உள்ள செம்பியன் மாதேவி என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அதில் பயணம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சிதறி போய் விழுந்தனர். இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடல்களிலெல்லாம் ரத்தம் வழிந்தது. 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது சம்பந்தமாக எலவாசனூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.