Skip to main content

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Kallakurichi student dies; High Court orders CPCID Police!

 

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி மூன்று அறிக்கைகளை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார்.

 

பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 53 யூ-டியூப் லிங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 7 ட்விட்டர் பக்கங்களும், 21 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வதந்தி பரப்பியதாக மூன்று வாட்ஸ் ஆப் குழுக்களின் அட்மின்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக 63 போலீசார் உள்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர சுப்பு, ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் மாணவியின் தாய் முதலமைச்சரை சந்தித்து முறையீடு செய்தார். அதைக் கேட்ட முதலமைச்சர், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று  தெரிவித்தார்.

 

ஜிப்மர் ஆய்வறிக்கை மற்றும் விசாரணை நிலை குறித்து அறிக்கை மனுதாரர் தரப்புக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமித்த அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும்,  வழக்கின் புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு உத்தரவிட்டு,  விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்