தஞ்சை மாவட்டத்தில், கஜா புயலுக்கு பிறகு வேளாண்துறையினரால் மானியத்தில் வழங்கப்பட்ட உளுந்து விதை பயிரிட்டும் பலன் தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை எம்.செல்வம் கூறும் போது..
கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை தாக்கி தென்னை, வாழை, மா, பலா, என்று மரங்களையும் வீடுக்களையும், விவசாயத்தையும் கடுமையான பாதித்தது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, ஆலங்குடி தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தென்னை விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள்.
ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் வீடுகளை இழந்தனர். தென்னை விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் அரசு நிவாரணம் அறிவித்தது. மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கெடுப்பு செய்யாமல், ஆளுங்கட்சியின் தலையீட்டாலும், அதிகாரிகளின் குளறுபடியாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் இதுவரை முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை.
நிவாரணம் கிடைக்காத ஆயிரக்கணக்கானோர் வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், வங்கிகள் என அலைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையால் ஆடுதுறை 5 என்ற உளுந்து விதை மானிய விலையில் வழங்கப்பட்டது. இதனை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று விதைத்தார்கள். 60 நாட்கள் ஆகியும் உளுந்து செடியிலிருந்து, பூவும், காயும் இதுவரை வரவில்லை.
வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டால், முறையான பதில் இல்லை. இதனால் உளுந்து பயிரிட்ட விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விதை நேர்த்தி செய்யாமல் தரக் கட்டுப்பாடு இல்லாத உளுந்து விதைகளை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு வழங்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேபோல தான் தரமற்ற தென்னங்கன்றுகளை வழங்கினார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறை அதிகாரிகளும் விவசாயிகளின் உளுந்து பயிர்களை பார்வையிட்டு, உடனடியாக நிவாரணமாக ஏக்கருக்கு ரூ 70 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். முறைகேடுகளுக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்திட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என்றார்.