கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ளது தேவனூர். இந்த ஊருக்கருகே கருவோடை என்ற ஓடை ஒன்று ஓடுகிறது. இந்த ஓடையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகத் தண்ணீர் ஓடி அதன் மடுவு பகுதியில் தேங்கிக் கிடக்கிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிராமப் பெண்கள், ஆண்கள் வயல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது குளிக்கச் செல்வதுண்டு. அவ்வாறு குளிக்கச் சென்றவர்கள், அந்த ஓடை மடுவு பள்ளத் தண்ணீரில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் சடலமாகத் தண்ணீரில் கவிழ்ந்த நிலையில் மிதப்பதாகக் கடந்த மூன்றாம் தேதி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரிக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கிராம நிர்வாக அதிகாரி தேவராஜ் மற்றும் போலீசார் அந்த ஓடைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். தண்ணீரில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் உடல் அழகிய நிலையில் கடந்த மூன்று நாட்களாகத் தண்ணீரில் மிதந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ் சார்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணை யாராவது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து ஓடை மடுவு தண்ணீரில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மலைக்காட்டு பகுதி ஓடை மடுவு தண்ணீரில் இளம் பெண் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த சம்பவம் மலைக் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.