கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 329 பேரில் 108 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி தரப்பில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாளாளர், செயலாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் தற்பொழுது கள்ளக்குறிச்சி வருகை தந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதல்முறை மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் திருவண்ணாமலை சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை சிபிசிஐடி தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாளாக சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்துள்ளது.