தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் துரித கதியில் செய்து வருகிறார்கள். மேலும் பிரச்சாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை கரோனா பெருந்தொற்றை முன்னி்ட்டு வைத்துள்ளது. இதனால் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள் அதனை கடைப்பிடித்து வருகிறார்கள். சில இடங்களில் குறைபாடுகள் இருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தேர்தலையே ரத்து செய்துள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்காரணமாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார்கள். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி செல்வக்குமார் சங்கராபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்தல் பணி தொடர்பாக ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 7ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி அவர்களை அச்சரியப்படுத்தியுள்ளார். அவர் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.