திருக்கோவிலூர் அருகில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்கள், கிருஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே கழிவு நீர்கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அதற்கான இடத்தையும் கிருஷ்ணமூர்த்தி ஒதுக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், கால்வாய் அமைக்க அந்த இடம் போதாது அப்பகுதியில் உள்ள சிமெண்ட் சாலையை அகலப்படுத்த வேண்டும் எனக்கூறி வீட்டின் ஒரு பகுதியை இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே கால்வாய் அமைக்க போதுமான இடம் கொடுத்த பிறகும் ஏன் எனது வீட்டை இடித்து இப்படி நாசம் செய்கிறீர்கள் என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி, அவரது தாய் அமிர்தம், அவரது மனைவி கமலா, மகன் தேவேந்திரன், அவரது மனைவி ரம்யா, கிருஷ்ணமூர்த்தியின் இன்னொரு மகன் தேவராஜ் மற்றும் தேவேந்திரனின் இரண்டு கை குழந்தைகள் என மொத்தம் எட்டு பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்குள்ள நுழைவாயிலில் அமர்ந்து தங்கள் குடும்பத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து அனைவரும் தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை அழைத்துச் சென்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மேற்கண்டவாறு தங்கள் குடும்பத்திற்கு ஊரில் உள்ள சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருவது குறித்து கூறியுள்ளனர். அவர்களிடம் எழுத்துப்பூர்வமான புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.