கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான சேகர் மற்றும் செல்வி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மேலும் தங்களின் திருமணத்திற்கு உதவியாக அரசு சார்பில் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்யாண சீர்வரிசை திட்டத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் திருமண சீர் வரிசை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் தங்களின் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை சந்தித்து ஆசி பெற்றனர். மணமக்களை ஆசிர்வதித்த ஆட்சியர் அவர்களுக்கு திருமண பரிசாக இலவச வீட்டு மனை பட்டாவும், குடியிருக்க அரசு சார்பில் வீடு ஒன்றை கட்டி தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த உத்தரவை 10 நாட்களில் செயல்படுத்துமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கேட்ட தம்பதியர் ஆட்சியருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அங்கு இருந்த மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.