கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிற நிலையில் போலீசார் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டுமென அறிவுறுத்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் அச்சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உறவினர்கள், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் திடீரென அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை எடுத்து வீசினர். மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அதேபோல் தனியார் பள்ளியின் மீதும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தரப்பில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த போராட்டம் நடந்து வருகிறது.
தற்போது நடைபெற்ற பிரேப் பரிசோதனை அறிக்கையில் தெளிவு இல்லை எனக்கூறி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற கல்வீச்சு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நினைத்த நிலையில் போராட்டம் கட்டுக்கடங்காததால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அங்கு இருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் மேலும் பலர் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் டி.ஐ.ஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.