சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். சுதந்திரதினத்தையொட்டி விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆகையால் வரிசையில் நின்று காத்திருந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது ஒரு மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செய்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கினர்.
வெளியே வந்த அவர் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே வசிக்கிறேன். எனது பெயர் யுவராஜ். எனக்கு வயது 28. நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனது தாயார் காலமாகிவிட்டார். எனது தந்தை வாட்சுமேனாக பணியாற்றி வருகிறார். வசதி இல்லாத காரணத்தினால் 4ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான். நான் திமுகவில் இளைஞரணியில் இருக்கிறேன்.
எங்கள் குடும்பம் திமுக குடும்பம்தான். ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதையும், பாசமும் வர காரணம், எங்களைப் போன்றவர்களை இந்த சமூகத்தினர் ஊனமுற்றவர்கள் என்று சொன்னார்கள். ஆனால் எங்கள் தலைவர் கலைஞர்தான், மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் திறமை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்தவர் அவர்தான். என்னைப்போன்ற இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுத்தவர். கலைஞரை அனைத்து விதத்திலும் எனக்கு பிடிக்கும். அவரைப்போன்ற ஒருவர் இனி பிறக்க முடியாது.
கலைஞரை எங்கள் குடும்பத்தில் பிறந்தவராக, எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் நினைக்கிறேன். கலைஞர் என் தாத்தா. அப்படித்தான் நினைக்கிறேன். கடந்த 7ஆம் தேதியே அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். கூட்டம் அதிகமாக இருப்பதால் என்னால் அஞ்சலி செலுத்த முடியாது என்று எனது தந்தை கூறிவிட்டார். அதனால்தான் இன்று வந்தேன் என்றார்.