தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ. 62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.3.2023 அன்று ஏறுதழுவுதல் அரங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன் கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83 ஆயிரத்து 462 சதுர அடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் தை மாதங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திவரும் விவசாயிகளுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த மாடு பிடி வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தினை இன்று (24.01.2024) காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு வருகை தந்து திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர்கள் உட்பட உள்ளாட்சி நிறுவனங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்கிறார்கள். கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நேரலையில் காண தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி https://www.youtube.com/watch?v=x3ZqnzYMUEM என்ற யூடியூப் பக்கத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.