கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய கவுண்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சில நாட்களாகவே தோட்டங்களில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தொடர்கதையாக நிகழ்ந்து வந்தது. மேலும் குறிப்பிட்ட நபர் ஒருவர் இறந்து கிடக்கும் காகங்களை சாக்குப் பையில் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் காகங்கள் உயிரிழந்து கிடந்த நிலையில் அதனை ஒரு நபர் சாக்குப் பையில் சேகரித்து எடுத்துக் கொண்டிருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் அந்த நபரை பிடித்ததோடு காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தனர். விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் காகங்களைக் கொன்று சாக்குப் பையில் சேகரித்துச் சென்ற சிஞ்சுவாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரை கைது செய்தனர். சர்க்கஸ் தொழிலாளியான சூர்யாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது, வெண்படை எனும் நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகளை தயாரிக்க காகங்களைக் கொன்றதாக தெரிவித்தார். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த காகங்களை பிரியாணி உணவு விடுதிகளுக்கு கொடுத்திருக்கலாம் என தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.