கடந்த ஆண்டு நவம்பர் 16 ம் தேதி கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், கறம்பக்குடி, உள்பட பல நூறு கிராமங்கள், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் தென்னையை நம்பி ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வாழ்ந்தனர். தற்போது அந்த மக்கள் வேலை இழந்து வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். அந்த தென்னை சார்ந்த தொழில்களில் ஒன்று கயிறு உற்பத்தி மற்றும் கழிவுகளில் கேக் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில். இந்த தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் சேதமடைந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன.
இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கயிறு உற்பத்தி தொழிற் சாலைகளுக்கு அரசு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. எனவே கயிறு தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பேராவூரணி காயர் மற்றும் காயர் புராடக்ட்ஸ் தொழிற்சாலை உரிமையாளர் சங்கம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி தேசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, கறம்பக்குடி, பள்ளாண்விடுதி, மேற்பனைக்காடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் கோடிக்கணக்காண தென்னை, வாழை மரங்கள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்தன.
மேலும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள், மனித உயிரிழப்பும் ஏற்பட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய போதிலும் அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை. மேலும், போதுமான அளவு நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை கிடைக்க வில்லை. இதனால் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர்.
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயல் காரணமாக தேங்காய் பறித்தல், கயிறு உற்பத்தி தொழில், கீற்று முடைதல், தேங்காய் மட்டை உரித்தல் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்தி தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் சார்ந்துள்ள தொழிலாளிகள் பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் 250 க்கும் மேற்பட்ட கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த கயிறு தொழிற்சாலைகளில் கயிறு பித்து பிளாக் தயாரித்தல், கயிறு தயாரித்தல், உரிமட்டை நார் அடித்தல், தேங்காய் மட்டை உரித்தல், பஞ்சு காய வைத்தல் என பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தமிழகம் மற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வந்தனர். தற்போது இந்த தொழிற்சாலைகள் இயங்காததால் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்துள்ளனர். மேலும், இங்கிருந்து தயார் செய்யப்படும் கயிறு மற்றும் பித்து பிளாக்குகள் சீனா, ஸ்பெயின், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் நமது நாட்டிற்கு ஏராளமான அன்னிய செலவாணி கிடைத்து வந்தது. மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இப்பகுதியில் உள்ள அனைத்து கயிறு தொழிற்சாலைகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. இதையடுத்து மாவட்ட தொழில் மைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு அங்கிருந்து வந்த அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து, இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி வருவாய் துறை அதிகாரிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை எவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை.
இங்குள்ள கயிறு தொழிற்சாலைகள் சாதாரணமாக ரூபாய் 20 லட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டவையாகும். புயல் காரணமாக இந்த தொழிற்சாலைகளில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்படாதது, கயிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொழிற்சாலை கூரைகள் புயல் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தளவாடப் பொருட்கள், மூலப் பொருட்கள் வெயிலும், பனியிலும், மழையிலும் கிடந்து வீணாகி வருகிறது.
பேராவூரணி காயர் மற்றும் காயர் புராடக்ட்ஸ் தொழிற்சாலை உரிமையாளர் சங்க தலைவர் அக்ரி ஜி. கோவிந்தராஜ், செயலாளர் இரா. வெங்கடேசன், பொருளாளர் கே. அப்துல் முத்தலிப் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக நாங்கள் நடத்தி வந்த குறிப்பாக பேராவூரணி பகுதியில் மட்டும் 86 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பலமுறை பார்வையிட்டும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் மூடிக் கிடப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவும், மீண்டும் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் அந்நிய செலவாணி வருவாய் இல்லாமல் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொழில் கூடங்களை சீரமைக்க, மறுசீரமைப்பு செய்ய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து தரவும், கடன் செலுத்தும் தவணையை நீட்டிப்பு செய்து தரவும், புதிய கடன் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் சிறு தொழிற்சாலைகளும் நடைமுறைக்கு வரும் ஆயிரக்கணக்காண தொழிலாளர்களும் பசியை போக்க வேலையும் கிடைக்கும்.
நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்த அரசு மனமிறங்கி வரவேண்டும். வந்து சிறுகுறு தொழில்களையும் பார்க்க வேண்டும். ஜ.எஸ்.டி யால் திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டது போல கஜா புயலால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சிறுகுறு தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.