கொரோனா வைஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்றவற்றுக்காக தெருவில் நடமாடவோ, 5 பேருக்கு மேல் கூடவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நலன் கருதி, மளிகை பொருள்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வகையில் உள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், முன்னணி மளிகைக் கடைகளுடன் இணைந்து சேலம் மாவட்டநிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் எந்தெந்த கடைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான பட்டியலையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ள கடைக்காரர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களின் விவரங்களைச் சொன்னால், அவர்களே நேரடியாக வீட்டுக்கே விநியோகம் செய்கின்றனர். இந்த சேவைக்காக 'பில்' தொகையுடன் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது.