Skip to main content

'அமெரிக்காவில் இருந்தாலும் கவனித்துக் கொண்டேதான் இருப்பேன்'-முதல்வர் பேச்சு

Published on 16/08/2024 | Edited on 16/08/2024
nn

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தற்பொழுது தொடங்கி இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள '40/40-தென்திசையின் தீர்ப்பு' என்ற தலைப்பில் அந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் அதனை ஆவணமாக பதிவு செய்யும் வகையில் இந்த நூலை தமிழக முதல்வரை எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி எப்படி வெற்றியை சாத்தியமாக்கியது; முதல்வர் அமைத்த வியூகம் என்னென்ன;  திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது; பேச்சுவார்த்தையில் நடைபெற்ற அம்சங்கள் என்னென்ன; திமுகவின் தேர்தல் அறிக்கை; திமுக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்; முதலமைச்சர் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள் ஆகியவை இந்த புத்தகத்தில் அடங்கியதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம். அதை வாக்குகளாக மாற்ற நம்முடைய களப்பணி என்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திமுகவை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே நம்முடைய இலக்கு. அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்'' என்று பேசினார்

 

சார்ந்த செய்திகள்