
காவிரி மேலாண்மை வாரியம் அமை.. வாரியம் அமைக்க அழுத்தம் கொடு என்று நாளுக்கு நாள் போராட்டங்கள் விரிவடைந்து வரும் நிலையில் தனி நபர் போராட்டங்களுக்கும் பஞ்சமில்லை.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அறிஞர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் எருக்கலக்கோட்டை கடை வீதியில் ஒரு கடை வாசலில் பதாகை வைத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனி நபராக உண்ணாவிரதம் தொடங்கினார்.
இந்த நிலையில் நமது கோரிக்கை மோடி காதுக்கு கேட்கவில்லை அவருக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள். அதனால் தான் நாம் கதறுவது கேட்கவில்லை. அதனால் 4வது நாளான வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு அங்கிருந்து துர்தேவதைகளிடம் பேசி மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியத்தை அகற்றி நம் கோரிக்கைகளை மோடி காதுக்கு கொண்டு போகும் போராட்டம் நடத்த இருப்பதாக கூறினார். இந்த தகவல் அறிந்த அறந்தாங்கி போலிசார் இன்று அதிகாலை அறிஞரை கைது செய்தனர்.