திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது நீதிமன்ற அரங்கத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக் கரபாணி முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆன பார்த்திபன், நிர்மல் குமார் மற்றும் மஞ்சுளா ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதன்பின் விழாவில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, கொடைக்கானலுக்கு சார்பு நீதிமன்றம் தேவை என்ற கோரிக்கை இருப்பதை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதன் பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொடைக்கானல் என்றாலே தனி கவனத்துடன் வழக்குகளில் கையாண்டு மலைகளின் இளவரசியான கொடைக்கானலை காப்பாற்ற உறுதுணை நின்றிருக்கிறார்கள். நீலகிரி மலையின் உதகமண்டலம் வணிக மையமாக மாறி விட்ட நிலையில் இன்றும் இளமையுடன் கொடைக்கானல் இருப்பதால் இதனை மலைகளின் இளவரசி என்று அழைக்கின்றனர். மேலும் கடந்த 30 ஆண்டுகளாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் எந்த ஒரு மரங்களையும் வெட்ட விடாமல் பாதுகாக்கும் பணியை நீதிமன்றங்கள் செய்து வருவதாகவும் கூறினார். இனிவரும் எதிர் காலங்களிலும் மலைகளின் இள வரசி கொடைக்கானலை பாதுகாக்க நீதியரசர்கள் துணை நிற்பார்கள் என்று நம்புவதாக கூறினார்.