முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமானவரித்துறை வழக்கில் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் தீபக்கைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-2009 ஆம் ஆண்டு காலங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது செல்வ வரி (wealth tax) தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. ஜெ.தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று வருமானவரித்துறை தீர்ப்பாயம் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் இன்று அந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஜெ. மரணத்திற்கு பிறகு ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வாரிசுகளாக நியமிக்கப்பட்டுள்ளன நிலையில், அவர்கள் இருவரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்த்துக் கூடுதல் மனுவை வருமானவரித்துறை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.