Skip to main content

கஞ்சா வியாபாரத்தை தடுக்க இரு மாநில போலீஸார் கூட்டு நடவடிக்கை

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Joint operation by police of two states to stop the business of cannabis

 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை ஆகியவற்றை தடுக்கும் விதமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சுமார் 2,200 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அது போல் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா மற்றும் குட்கா புகையிலையை அதிகாரிகள் தீயிட்டு எரித்து அழித்துள்ளனா்.

 

இந்த நிலையில், கஞ்சா ஆசாமிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை குறித்து வைத்து சப்ளை செய்து வருவதை கண்டறிந்துள்ள குமரி  மாவட்ட போலீசார் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தலைமையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கஞ்சா மற்றும் குட்காவை ஓழிக்கும் விதமாகவும் மாணவா்கள் அதற்கு அடிமையாவதை தடுக்கும் விதமாகவும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். 

 

இதே போல் ஒவ்வொரு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து சல்லடை போட்டு கஞ்சா மற்றும் குட்கா விற்பவா்களை தேடி வருகின்றனா். மேலும் 7010363173 என்ற செல்போன் எண்ணை பொது மக்களிடம் அறிமுகம் படுத்தி, ‘உங்கள் ஊா் மற்றும் பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பவா்கள் குறித்து தகவல் தெரிவியுங்கள்’ என மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது. 

 

அது போல் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்களில் போதை விழிப்புணா்வு ஸ்டிக்கரும் ஒட்டி மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் கொரியா் பார்சல் மூலம் கஞ்சா வருவதை தடுக்கும் விதமாக அனைத்து கொரியா் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தலைமையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் கஞ்சா மறறும் குட்கா புகையிலை கொண்டு செல்வதையும் விற்பனை செய்வதையும் தடுக்கும் விதமாக திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி.ஷில்பா தியா மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் குமரி - கேரளா எல்லையான களியக்காவிளையில் பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணா்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

 

இதில் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிக்கள், கடை வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுப்பது விதமாக காவல்துறைக்கு தகவல் மற்றும் ஒத்துழைப்பு தருவது சம்மந்தமாக விழிப்புணா்வை ஏற்படுத்தினார்கள். மேலும் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட இரு மாநில போலீசாரிடமும் அறிவுறுத்தப்பட்டது. 

 

இரு மாநில போலீசாரின் இந்த கூட்டு நடவடிக்கையால் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் செய்யும் குற்றவாளிகளை தடுத்து விடலாம் என நம்புகின்றனா் பொது மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்