திரைப்படத்தில் துணை நடிகை மற்றும் வில்லி கேரக்டரில் நடிப்பதற்காக அழைத்துச் சென்று நகை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நாகம்மாள், கவிதா, லலிதா, ஆகியோர் திரைத்துறையில் துணை நடிகைகளாக பயணித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் 11ந் தேதி அன்று எஸ்.கே.ராஜேஸ்குமார் என்பவர், ‘தன்னை தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டு விஜய்சேதுபதியின் படத்திற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் தேவைப்படுகிறது. மேலும், ஒரு வில்லி கேரக்டருக்கும் ஆள் தேவைப்படுவதால் நீங்கள் வரமுடியுமா’ என கேட்டுள்ளார்.
அதற்கான படப்பிடிப்பு பழனியில் நடைபெறுவதால் நீங்கள் வருவதாக இருந்தால் நாளைக்கு கிளம்ப வேண்டியதாக இருக்கும் என சொல்லவே, அதன்படி இவர்களும் தன்னுடன் நடிக்கும் துணை நடிகைகள் ஆறு பேரைச் சேர்ந்துக் கொண்டு சென்றுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து கிளம்பி பழனி சென்று 13 ஆம் தேதி இரவு எஸ்.கே. லாட்ஜில் தங்கியுள்ளனர். மறுநாள் காலையில், விஜய் சேதுபதிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இன்று சூட்டிங் இல்லை ஆகையால் நீங்கள் வேறு எங்கேயாவது சுற்றிப்பார்க்க சென்று வாருங்கள் என சொல்லவே, அதற்கு அவர்கள் வெளியே செல்ல மறுத்து ஒரு நாள் முழுவதும் அதே அறையிலேயே தங்கியுள்ளனர்.
அதன் பின்னர், அடுத்தநாள் காலையில் ராஜேஸ்குமார் அவர்களை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கொசு குண்டு பகுதியில் ஒரு சாமியாரிடம் 15 ஆம் தேதி அன்று அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்று, ஆறுமுகம் எனும் சாமியாரிடம் அழைத்துச் சென்று அவர்களை பற்றி குறிகேட்டு மீண்டும் பழனி லாட்ஜ்க்கு திரும்பியுள்ளனர். லாட்ஜ்க்கு வந்தவுடன் நாகம்மாள் போட்டிருந்த நகை, புதிய டிசைனாக இருக்கிறது என அந்த நகையை கேட்க, இவரும் நம்பி கொடுத்துள்ளார். மேலும், மற்றவர்களிடம் இருந்த நகையை கேட்கவே அவர்கள் சந்தேகமடைந்து அவரிடம் கொடுக்க மறுத்துள்ளனர். உடனே, அவர்களை அடித்து மிரட்டி அவர்களிடம் இருந்த 10 பவுன் நகையும் பறித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகே அவன் போலி தயாரிப்பாளர் என்றும் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு எதுவும் இல்லை எனவும் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் பழனியில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளனர். அதன் பிறகு, இந்த தகவலை தன் குடும்பத்தாரிடம் சொல்லவே, அவர்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாராக கொடுத்துள்ளனர். அதற்கு போலீசார், இந்த புகாரை பழனி காவல் நிலையத்திற்கு கொடுக்கச் சொல்லவே, அதன்படி பாதிக்கப்பட்டவர்களும் பழனி போலீசாரிடம் புகாராக கொடுத்துள்ளனர். அதன்படி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில், சாமியார் ஆறுமுகத்திடம் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெண்களை அழைத்து வந்த ஏமாற்ற திட்டமிட்டது தெரியவந்துள்ளது.