சேலத்தில், பல கோடி ரூபாய் தங்கம், வைர நகைகள் மற்றும் சீட்டுப் பணத்துடன் பிரபல நகைக்கடை அதிபர் தலைமறைவாகிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த வலசையூரைச் சேர்ந்தவர் சபரி சங்கர். இவர், சேலம் அம்மாபேட்டையில் எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினார். பின்னர், சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், அரூர், தர்மபுரி, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் கிளைகளைத் தொடங்கினார். இங்கு நகை விற்பனை மட்டுமின்றி, பழைய நகைகளை வாங்கும் தொழிலும் செய்து வந்தார். இத்துடன், மாங்கல்யம், தங்க புதையல் என்ற பெயர்களில் நகை சீட்டுத் திட்டத்தையும் நடத்தினார்.
பழைய நகைக்கு அதே மதிப்பில் புதிய நகைகள் விற்பனை, செய்கூலி, சேதாரத்தில் சலுகை, இலவச பரிசுகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் நகை சீட்டு திட்டத்தில் கோடிக்கணக்கில் கொட்டினர். நகை சீட்டுத் திட்டம் குறித்து புரமோஷன் செய்வதற்காகவே ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களை ஒவ்வொரு கிளைகளிலும் சபரி சங்கர் பணிக்கு அமர்த்தி இருந்தார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்த எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகள் மூடப்பட்டன. ஒரே நேரத்தில், வெளியூர்களில் இயங்கி வந்த கிளை நிறுவனங்களும் மூடப்பட்டன. தீபாவளி நகை சீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள், பண்டிகையையொட்டி புதிய நகைகளை வாங்குவதற்காக இந்தக் கடைக்குச் சென்றபோதுதான், கடைகள் மூடப்பட்டு இருந்த விவரமே அவர்களுக்குத் தெரிய வந்தது.
இதற்கிடையே, பல கோடி ரூபாய் நகை, பணத்துடன் கடை உரிமையாளர் சபரி சங்கர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரவியது. இந்தக் கடையில் வேலை செய்து வந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே சரியாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள், சீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள எஸ்விஎஸ் நகைக்கடைகளின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, ரஞ்சித் என்பவர் நகை சீட்டுத் திட்டத்தில் 11 லட்சம் ரூபாய் செலுத்தி இருப்பதாக அம்மாபேட்டை காவல்நிலையத்திலும், பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் ஏமாற்றி விட்டதாக சில ஊழியர்கள் அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அள்ளிவிட்டு நகைக்கடை உரிமையாளர்கள் கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு தப்பியோடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தலைமறைவான எஸ்விஎஸ் நகைக்கடை அதிபரை பிடித்து விசாரித்தால், பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.